மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் பகுதியில், மதுபோதையில் மனைவியைத் தேடிச் சென்று அவரது வீட்டின் மீது நாட்டுத் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போதைக்கு அடிமையான ஜோகேந்திர சிங் ராணா என்பவன், தனது மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளான்.

இதனால் கணவனின் சித்ரவதையைச் சகிக்க முடியாத அவனது மனைவி, தனது இரண்டு குழந்தைகளுடன் சவுஜனா கிராமத்தில் உள்ள தனது தந்தை மற்றும் மாமா வீட்டில் தஞ்சமடைந்துள்ளார். கடந்த வாரம் மனைவியை வலுக்கட்டாயமாகத் தன் ஊருக்கு அழைத்துச் செல்ல முயன்றபோது, அவள் வர மறுக்கவே ஆத்திரம் தலைக்கேறியுள்ளது.

மனைவி பிடிவாதமாக மறுத்ததை அடுத்து, ஆத்திரம் அடைந்த ஜோகேந்திர சிங் தேசி கட்டா எனப்படும் நாட்டுத் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு அவளது வீட்டின் முன்பு சென்று ரகளையில் ஈடுபட்டுள்ளான். வீட்டின் கூரை மீது ஏறிக்கொண்டு குடும்பத்தினரை ஆபாச வார்த்தைகளால் திட்டியதுடன், அச்சுறுத்தும் வகையில் வானத்தை நோக்கிச் சுட்டுவிட்டு, தனது மனைவியின் மாமாவான அரவிந்த் குர்ஜார் என்பவரைக் குறிவைத்துப் பகிரங்கமாகச் சுட்டுள்ளான்.

இந்தத் தாக்குதலில் அரவிந்த் நல்வாய்ப்பாக உயிர் தப்பியபோதிலும், அங்கு நின்றவர்கள் அனைவரும் அலறி அடித்து ஓடியுள்ளனர். உடனடியாகக் கிராம மக்கள் அளித்த தகவலின் பேரில் பஹோடாபூர் காவல் நிலையப் பொறுப்பாளர் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

காவல்துறையைக் கண்டதும் மேலும் ஆக்ரோஷமடைந்த அந்த நபர், லோடிங் செய்யப்பட்ட துப்பாக்கியுடன் வீட்டின் மேல் நின்று கொண்டு சரமாரியாக மிரட்டல் விடுத்துள்ளான். சுமார் இரண்டரை முதல் மூன்று மணி நேரம் வரை நீடித்த இந்த நாடகத்தின் போது, போலீஸ் அதிகாரிகள் மிகுந்த சாதுரியமாக அவனிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவனது கவனத்தைத் திசை திருப்பினர்.

அவன் பீடி குடித்துக்கொண்டிருந்த அந்தச் சமயத்தைப் பயன்படுத்தி மின்னல் வேகத்தில் செயற்பட்ட போலீசார், அவனிடமிருந்த நாட்டுத் துப்பாக்கியையும் தோட்டாக்களையும் பறிமுதல் செய்து அவனை மடக்கிப் பிடித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், காவல்துறையினர் பிடிபட்ட ஜோகேந்திர மீது கொலை முயற்சி மற்றும் ஆயுதச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.