இன்றைய அவசர உலகில் அதிகப் பணம் சம்பாதிக்கும் ஓட்டப்பந்தயத்தில் ஒட்டுமொத்த மனிதகுலமும் ஓடிக்கொண்டிருக்கும் வேளையில், ரெடிட் (Reddit) சமூக வலைத்தளத்தில் கார்ப்பரேட் ஊழியர் ஒருவர் பகிர்ந்துள்ள நெகிழ்ச்சியான பதிவு ஒன்று தற்போது இணையத்தில் பலரையும் சிந்திக்க வைப்பதுடன் அதிவேகமாக வைரலாகியும் வருகிறது.
சமூகத்தின் பார்வைப்படி ஒவ்வொரு மாதமும் தனது வங்கி கணக்கில் 2.5 லட்சம் ரூபாய் கிரெடிட் ஆவதால் தான் ஒரு வெற்றியாளராகக் கருதப்பட்டாலும், மனதளவில் தான் பெரும் ஏமாற்றத்தையும் தனிமையையும் மட்டுமே உணர்வதாக அந்த ஊழியர் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.
தான் வெறும் 25,000 ரூபாய் மட்டுமே சம்பாதித்த காலத்தில் 500 ரூபாய்க்கு ஒரு சாதாரண டின்னர் சாப்பிடுவது கூட ஒரு பெரிய சாதனையாகவும், ஒரு புது சட்டை வாங்குவது கூட அத்தனை ஸ்பெஷலாகவும் இருந்ததாகக் கூறியுள்ள அவர், அப்போது ஒவ்வொரு ரூபாய்க்கும் ஒரு நோக்கமும், அதைச் செலவழிப்பதில் ஒரு சுதந்திரமும், வாழ்க்கையில் ஒரு தனி சந்தோஷமும் இருந்ததாகத் தெரிவித்துள்ளார்.
ஆனால், இப்போது 2.5 லட்சம் ரூபாய் வந்தவுடன் அதில் 50 சதவீதப் பணம் யாருக்காகவோ எதிர்கால முதலீடு, மியூச்சுவல் ஃபண்ட் எனச் சென்றுவிடுவதாகவும், மீதிப் பணம் வாடகை, வீட்டு பில்கள் மற்றும் பெற்றோருக்கு அனுப்பவே சரியாக உள்ளதாகவும் ஆதங்கப்பட்டுள்ளார்.
தன் உழைப்பின் பணம் தன்னைத் தவிர மற்ற எல்லோரின் தேவைக்கும் பயன்படுவதால், தற்போதைய வாழ்க்கையில் தனக்கான எந்த ஒரு சுவாரசியமும் இல்லை என்றும், வெறும் பணத்தை டிஜிட்டல் திரையில் பார்த்துப் பார்த்துத் தன் சொந்தக் கணக்கிற்கே ஒரு ‘டேட்டா என்ட்ரி கிளார்க்’ போலத் தான் மாறிவிட்டதாகவும் அவர் பகிர்ந்துள்ள இந்த உருக்கமான வரிகள், பணம் மட்டுமே வாழ்க்கையில் மகிழ்ச்சியைத் தந்துவிடாது என்பதை உணர்த்துவதாக நெட்டிசன்கள் பலராலும் உற்றுநோக்கப்பட்டு வருகிறது.
