மத்திய பிரதேச மாநிலம் மொரேனா மாவட்டத்தின் பன்சாரி பஜார் பகுதியில், பட்டப்பகலில் மளிகைக் கடைக்குள் புகுந்து 62 வயது முதியவர் மீது ரவுடி கும்பல் ஒன்று கொடூர தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கு மளிகைக் கடை நடத்தி வரும் அனில் மிட்டல் என்பவர் தனது கடையில் அமர்ந்திருந்தபோது, திடீரென உள்ளே புகுந்த சில வாலிபர்கள், அவர் மீது கலப்படக் குற்றச்சாட்டுகளைக் கூறி அசிங்கமான வார்த்தைகளால் திட்டியுள்ளனர்.
வியாபாரி அவர்களிடம் அமைதியாகப் பேச முயன்றபோதும், கேடான எண்ணத்துடன் வந்த அந்த கும்பல், முதலில் அங்கிருந்த சிசிடிவி கேமராவை உடைத்துவிட்டு, மறைத்து வைத்திருந்த பயங்கர ஆயுதங்களால் அவரைச் சரமாரியாகத் தாக்கத் தொடங்கியுள்ளது.
இந்த கொடூர சண்டை அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள நிலையில், கடையில் இருந்த மற்ற வாடிக்கையாளர்களும், பக்கத்து கடைக்காரர்களும் உடனே ஓடிவந்து வாலிபர்களைத் தடுத்து வியாபாரியைக் காப்பாற்றியுள்ளனர்.
#WATCH | CCTV Captures Att*ck On Grocery Trader By Group Of Youth In Morena #MPnews #MadhyaPradesh pic.twitter.com/DXWVtUiObi
— Free Press Madhya Pradesh (@FreePressMP) May 31, 2026
பொதுமக்கள் கூட்டம் கூடியதைத் தொடர்ந்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடியது. இதுகுறித்துத் தகவல் அறிந்து விரைந்து வந்த கோட்வாலி போலீசார், தீபக் கரே என்ற முக்கியக் குற்றவாளியை உடனடியாகக் கைது செய்துள்ளனர். வணிகர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவத்தை அடுத்து, தலைமறைவாக உள்ள மற்ற குற்றவாளிகளையும் சிசிடிவி காட்சிகளை வைத்து உடனடியாகக் கைது செய்ய மாவட்ட எஸ்பி தர்மராஜ் மீனா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
