சென்னை பசுமை வழிச்சாலையில் தமக்கு ஒதுக்கப்பட்டிருந்த அதிகாரப்பூர்வ அரசு இல்லத்தை அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி முறைப்படி காலி செய்துள்ளார். கடந்த 2011-ஆம் ஆண்டு அமைச்சராகப் பொறுப்பேற்றது முதல், ‘செவ்வந்தி’ என்று அழைக்கப்படும் இந்த அரசு இல்லத்தில் அவர் தொடர்ந்து வசித்து வந்தார். பின்னர் முதலமைச்சர் மற்றும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ஆகிய பதவிகளை வகித்த காலத்திலும் இதே இல்லத்தையே அவர் பயன்படுத்தி வந்தார். இ பங்களா பொதுவாக அமைச்சர்கள் அல்லது சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருக்கு மட்டுமே ஒதுக்கப்படக் கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அண்மையில் நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக 53 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று, சட்டப்பேரவையில் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டது. இதன் காரணமாக எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தை இழந்த எடப்பாடி பழனிசாமிக்கு, விதிகளின்படி அரசு பங்களாவை காலி செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, பசுமை வழிச்சாலை இல்லத்தில் இருந்து தனது உடைமைகளை முழுமையாக அப்புறப்படுத்திய அவர், சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனது புதிய இல்லத்தில் பால் காய்ச்சி முறைப்படி குடியேறினார். இந்நிழ்வில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சிலர் மட்டுமே கலந்து கொண்டனர்.