தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்ததைத் தொடர்ந்து, அதிமுக மற்றும் தவெக ஆகிய இரு கட்சிகளுக்கும் இடையே புதிய அரசியல் மோதல் வெடித்துள்ளது. சமீபத்தில் தவெக மாநில நிர்வாகியும் அமைச்சருமான ஆதவ் அர்ஜுனா, அதிமுக தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துப் பேசியிருந்தார். இதற்கு அதிமுக முன்னாள் அமைச்சரும் முக்கிய நிர்வாகியுமான ஆர்.பி.உதயகுமார் கடுமையான வார்த்தைகளால் சரமாரி கேள்விகளை எழுப்பி லெப்ட் அண்ட் ரைட் வாங்கியுள்ளார்.

​செய்தியாளர்களைச் சந்தித்த ஆர்.பி.உதயகுமார், “ஆதவ் அர்ஜுனா அவர்களே, உங்கள் கட்சி மீதும், தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மீதும் நீங்கள் நம்பிக்கையை இழந்துவிட்டீர்களா? அல்லது உங்கள் தலைவர் முதலமைச்சர் விஜய் மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லையா? பின்னர் எதற்காக நாக்கைத் தொங்கப்போட்டுக் கொண்டு அதிமுக தொண்டர்களை உங்கள் கட்சியில் சேரும்படி கூவி கூவி அழைக்கின்றீர்கள்?” என ஆக்ரோஷமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிமுகவின் அடித்தளத்தை யாரும் அசைக்க முடியாது என்ற தொனியில் தவெக அமைச்சருக்கு அவர் கொடுத்துள்ள இந்த அதிரடி பதிலடி சமூக வலைத்தளங்களில் வைரலாகி, அரசியல் வட்டாரத்தில் பெரும் அனலைக் கிளப்பியுள்ளது.