அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ-வும், தமிழக முன்னாள் சட்டம்-ஒழுங்கு காவல்துறை தலைமை இயக்குநருமான (DGP) ஆர். நடராஜ், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார். பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், தவெக-வின் மாநில பொதுச்செயலாளர் என். ஆனந்த் முன்னிலையில் அவர் கட்சியில் இணைந்தார். அவருக்கு அக்கட்சியின் சால்வை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
முன்னாள் முதல்வர் செயலலிதாவின் நம்பிக்கைக்குரிய அதிகாரியாக அறியப்பட்ட ஆர். நடராஜ், காவல்துறை பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு அதிமுகவில் இணைந்தார். கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ-வாகப் பணியாற்றினார்.
அமைச்சர்கள் தலைமையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார் அதிமுக மயிலாப்பூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ நடராஜ் #Chennai #Panaiyur #Ministerbusyanand #ADMK #MLA #Newstamil24x7 pic.twitter.com/YpEuFg7ZUE
— News Tamil 24×7 (@NewsTamilTV24x7) May 28, 2026
சமீபகாலமாக தவெக தலைவர் விஜய்யின் அரசியல் நகர்வுகளைப் பாராட்டி வந்த நடராஜ், சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே அக்கட்சியில் இணையக்கூடும் என்று அரசியல் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்பட்டு வந்தது. அப்போது அவருக்கு மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்று செய்திகள் பரவிய நிலையில் அவர் தேர்தல் முடிந்த பிறகு தற்போது தான் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னாள் உயர் காவல்துறை அதிகாரி மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் தவெக-வில் இணைந்துள்ளது, அக்கட்சியின் அரசியல் நகர்வுகளில் ஒரு முக்கிய திருப்பமாகக் கருதப்படுகிறது.
