பஞ்சாப் மாநிலம் சங்கரூர்-பாட்டியாலா சாலையில் வியாழக்கிழமை அதிகாலை நேரத்தில், சைக்கிள் ஓட்டுநர்களைக் குறிவைத்துத் தாக்கி கொள்ளையடித்த இரண்டு நபர்களைப் பஞ்சாப் போலீஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

அதிகாலை 5:15 மணியளவில் பாய் குருதாஸ் கல்வி நிறுவனம் அருகே ஒரு வெள்ளை நிற மாருதி ஜென் காரில் வேகமாக வந்த கொள்ளையர்கள், அங்கிருந்த சைக்கிள் ஓட்டுநர்களை வழிமறித்து வாளைக் காட்டி மிரட்டி மொபைல் போன்களைப் பறித்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் கார் மோதி ஒரு சைக்கிள் ஓட்டுநர் காயமடைந்த நிலையில், இந்த கும்பல் அதற்கு முன்பும் பின்பும் அதே சாலையில் மேலும் சிலரிடமும் மொபைல் பறிப்பு மற்றும் வழிப்பறி முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த தகவலின் பேரில் உடனடியாகச் செயல்பட்ட சங்கரூர் சதார் போலீஸார், அடுத்த சில மணி நேரங்களிலேயே இரண்டு கொள்ளையர்களை வளைத்துப் பிடித்தனர்.

கைதானவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட 4 மொபைல் போன்கள், திருடப்பட்ட ஒரு மாருதி ஜென் கார் மற்றும் ஒரு ஆக்டிவா ஸ்கூட்டர் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

“>

 

இந்த அதிரடி கைது நடவடிக்கை குறித்து பஞ்சாப் போலீஸார் தங்கள் சமூக வலைதளப் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாகப் பகிர்ந்துள்ளனர்.

அதிகாலை நேரத்தில் தேசிய நெடுஞ்சாலையில் நடந்த இந்த வன்முறைச் சம்பவம், அப்பகுதி மக்களிடமும் சைக்கிள் ஓட்டுநர்களிடமும் தங்களின் பாதுகாப்பு குறித்த பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.