உத்தரகண்ட் மாநிலம் கேதார்நாத் யாத்திரை பாதையில், உடல் பருமனான ஒரு நபரைச் சுமந்து கொண்டு கோவேறு கழுதை ஒன்று மலைப்பாதையில் சிரமப்பட்டு ஏறும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

அந்த நபர் சுமார் 140 கிலோ எடை கொண்டவர் என்று கூறப்படும் நிலையில், செங்குத்தான மலைப்பாதையில் அந்த விலங்கு தவித்துக்கொண்டு செல்வது நெஞ்சை உலுக்குவதாகப் பலரும் தெரிவித்துள்ளனர்.

மத வழிபாடுகள் என்ற பெயரில் விலங்குகளை இப்படித் துன்புறுத்துவது கண்டிக்கத்தக்கது என்றும், யாத்திரை என்பது பக்தி மற்றும் ஒழுக்கம் சார்ந்ததாக இருக்க வேண்டுமே தவிர, விலங்குகளுக்கு வடியை உண்டாக்குவதாக இருக்கக் கூடாது என்றும் விலங்கு நல ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

அதே நேரத்தில், மற்றொரு தரப்பினர் அந்த நபருக்கு ஆதரவாகப் பேசி வருகின்றனர். அங்கு அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட ஒரு சேவையைத்தான் அவர் பயன்படுத்தியுள்ளார் என்றும், இதற்காக அவரை உடல் ரீதியாகக் கேலி செய்யக் கூடாது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

கேதார்நாத் யாத்திரை பாதையில் விலங்குகள் எவ்வளவு எடையைச் சுமக்கலாம் என்ற தெளிவான விதிகளும், முறையான மருத்துவக் கண்காணிப்பும் இல்லாததே இதற்கு உண்மையான காரணம் என்றும், இதற்கு உள்ளூர் நிர்வாகமும் அதன் ஆபரேட்டர்களுமே பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

“>

 

இந்த வீடியோ குறித்து உத்தரகண்ட் அரசு இன்னும் அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்காத நிலையிலும், ஆன்மீகச் சுற்றுலாவில் விலங்குகள் நடத்தப்படும் விதம் குறித்த விவாதம் மீண்டும் நாடு முழுவதும் தீவிரமடைந்துள்ளது.