ஆன்மீக வீடியோக்கள் மூலம் பிரபலமான டெல்லியைச் சேர்ந்த சுமித் நெம்சந்த் சர்மா (27) என்ற பூசாரி, இளம்பெண் ஒருவரின் நட்பை நிராகரித்ததற்காக அவருக்கும், அவருடைய தாயாருக்கும் நேர்ந்த சைபர் கொடுமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தைச் சேர்ந்த அந்த இளம்பெண்ணுடன் இன்ஸ்டாகிராமில் ஆன்மீகம் குறித்து பேசி பழகிய சுமித், பின்னர் அவரிடம் நட்பாக இருக்கக் கேட்டுள்ளார்.
அதற்கு அந்தப் பெண் மறுப்பு தெரிவிக்கவே, ஆத்திரமடைந்த சுமித், கடந்த சில மாதங்களாக அந்தப் பெண்ணை ஆன்லைனில் பின்தொடர்ந்து (Stalking) டார்ச்சர் செய்துள்ளார். மேலும், அந்தப் பெண்ணின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து அவரோட மற்றும் அவரது தாயாரின் புகைப்படங்களை திருடியுள்ளார். பின்னர், கூகுளில் ‘AI Remove Clothes’ போன்ற ஆபத்தான செயற்கை நுண்ணறிவு கருவிகளைப் பயன்படுத்தி, அவர்களின் புகைப்படங்களை ஆபாசமாக மார்பிங் செய்து 100-க்கும் மேற்பட்ட நிர்வாணப் படங்கள் மற்றும் வீடியோக்களை உருவாக்கியுள்ளார்.
அதனை அந்தப் பெண்ணின் பெயரிலேயே போலி இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் கணக்குகளைத் தொடங்கி, அவர்களின் குடும்ப மானத்தைக் கெடுக்கும் நோக்கில் பதிவேற்றியும் உள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், அகமதாபாத் சைபர் கிரைம் போலீஸார் ‘மிஷன் சைபர் ரக்ஷிகா’ திட்டத்தின் கீழ் தீவிர விசாரணை நடத்தி, டெல்லியில் பதுங்கியிருந்த அந்த கள்ளப் பூசாரியைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
