மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள சிட்னிஸ் கி கோத் பகுதியில், படுக்கையில் தூங்குவது தொடர்பாக தாய்க்கும் மகளுக்கும் இடையே ஏற்பட்ட சண்டை, குடும்பத் தலைவரான அனில் கபூர் என்பவரின் மரணத்தில் முடிந்துள்ளது. அனில் கபூர் தனது இரண்டாவது மனைவி ரிது மற்றும் மகள் மான்சியுடன் வசித்து வந்தார்.
கடந்த மார்ச் மாதம் திருமணமான மான்சி, சமீபத்தில் பெற்றோர் வீட்டிற்கு வந்திருந்தார். சம்பவத்தன்று, மான்சியின் படுக்கையில் ரிது தூங்கச் சென்றதால் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு, அது பெரிய சண்டையாக மாறியது.
இந்த சத்தத்தினால் ஏற்பட்ட பதற்றத்தில், ஏற்கனவே இதய நோயாளியான அனில் கபூருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு அங்கேயே சுருண்டு விழுந்தார். உடனே அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோதிலும், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவர் மாரடைப்பால் இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்தின் பின்னணியில் ஒரு சிக்கலான குடும்பக் கதையும் இருப்பதாகப் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. அனில் கபூரின் முதல் மனைவி கஞ்சன் 2019-ல் இறந்துவிட்டார். அவர்களுக்குக் குழந்தைகள் இல்லாததால், ரிது தனது மகள் மான்சியை அனில் – கஞ்சன் தம்பதிக்குக் தத்து கொடுத்திருந்தார்.
கஞ்சனின் மறைவுக்குப் பிறகு, கடந்த 2023-ல் அனில் கபூரை ரிது முறைப்படி இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் தான், படுக்கை வசதி தொடர்பான ஒரு சிறிய தகராறு அனில் கபூரின் உயிரைப் பறிக்கும் துயரத்தில் முடிந்துள்ளது.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், அனில் கபூரின் உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். அறிக்கை வந்த பிறகே மரணத்திற்கான துல்லியமான காரணம் தெரியவரும் என காவல்துறை அதிகாரி மனிஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
