உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில், 12 வயது சிறுமியைப் பெற்ற தாயே பணத்திற்காக விற்ற கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜனவரி மாதம், சந்தௌலி பகுதியைச் சேர்ந்த லஹ்ரு யாதவ் (40) என்ற நபர், சிறுமியின் தாய்க்கு 16,000 ரூபாய் பணம் மற்றும் 10 புடவைகளைக் கொடுத்து அச்சிறுமியை விலைக்கு வாங்கியுள்ளார்.
தனக்கு வயது குறைவாகத் தெரிய வேண்டும் என்பதற்காக டெல்லியில் தலைமுடி மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட அந்த நபர், சிறுமியைச் சட்டவிரோதமாகத் திருமணம் செய்து, வீட்டில் அடைத்து வைத்துத் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அண்டை வீட்டாரின் எச்சரிக்கையால் பயந்துபோன அந்த நபர், கடந்த மே 19 அன்று சிறுமியைப் பனாரஸ் ரயில் நிலையத்தில் தனியாக விட்டுவிட்டுத் தப்பியுள்ளார்.
ரயில் நிலையத்தில் தவித்த சிறுமியைத் தாயிடம் அழைத்துச் செல்வதாகக் கூறி, ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ரவி வர்மா என்ற ஆட்டோ ஓட்டுநர் ஏரிக்கரைக்குக் கடத்திச் சென்று பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர், மே 21 அன்று சிறுமியை அங்கேயே தவிக்கவிட்டுச் சென்றுள்ளார். வாரணாசியின் சாரநாத் பகுதியில் அழுதுகொண்டிருந்த சிறுமியை மீட்ட பொதுமக்கள் போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர்.
தற்போது பாதுகாப்பாக மீட்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், இக்கொடூர குற்றத்தில் ஈடுபட்ட சிறுமியின் தாய், லஹ்ரு யாதவ் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் ரவி வர்மா ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
