அதிமுக எம்.எல்.ஏக்கள் 3 பேர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா முன்னிலையில் தவெகவில் இணைந்தது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வை அடுத்து, ‘குதிரை பேரம்’ நடப்பதாக திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் எக்ஸ் (X) பக்கத்தில் குற்றம் சாட்டியிருந்தார்.
இதற்குப் பதிலடி கொடுத்துள்ள காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், “அதிமுக எம்.எல்.ஏக்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, வெளிப்படையாகத்தான் தவெகவில் சேர்ந்துள்ளார்கள்; இதில் ஏன் இவ்வளவு கதறல்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் அவர் தனது பதிவில், “மக்கள் 107 எம்.எல்.ஏக்களுடன் விஜய்க்கே ஆட்சி அமைக்க வாய்ப்பளித்தார்கள்; உங்களிடம் 59 எம்.எல்.ஏக்கள் மட்டுமே இருந்ததால் மக்கள் உங்களைப் பாதியிலேயே நிறுத்திவிட்டார்கள். ஆனால், உதயநிதியும் பழனிசாமியும் பாஜக மூத்த தலைவரின் உதவியோடு டெல்லி அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்கள் தீர்ப்பை மாற்ற முயன்றனர்.
தமிழ்நாட்டில் பின்வாசல் வழியாக பாஜக ஆட்சியை அனுமதிக்கக் கூடாது என்பதால்தான் காங்கிரஸ் தவெக அரசை ஆதரித்தது. மக்களின் தீர்ப்பை மதிக்காமல் டெல்லி அதிகாரத்துடன் விளையாடியது யார் என்பதைத் தமிழ்நாடு அறியும். மூன்று தொகுதி மக்களும் விரைவில் இதற்குத் தீர்ப்பு சொல்வார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
