பாகிஸ்தானில் மூன்று ஆண்டுகள் வாழ்ந்த ஹர்ஷ்நீத் கவுர் என்ற இந்தியப் பெண், அங்குள்ள மக்கள் மற்றும் கலாச்சாரம் குறித்துப் பகிர்ந்த நினைவுகள் சமூக வலைதளங்களில் பலரின் இதயங்களை வென்று வருகின்றன.
இன்ஸ்டாகிராமில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், தன் தந்தை தலைப்பாகை அணிந்திருந்ததால், தங்களை அடையாளம் கண்டுகொண்ட பாகிஸ்தான் மக்கள் எப்போதும் அன்போடு உபசரித்ததாக அவர் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
“சர்தார் ஜி, நீங்கள் தேநீர் அருந்திவிட்டு, உணவு சாப்பிட்டுத்தான் செல்ல வேண்டும்” என்று கூறி, தங்களை எப்போதும் சாப்பிடாமல் அனுப்பியதே இல்லை என அவர் மக்களின் விருந்தோம்பலைப் பாராட்டியுள்ளார்.
மேலும், அவர் வசித்த இஸ்லாமாபாத் நகரின் எழில் கொஞ்சும் அழகும், குறிப்பாக எங்குத் திரும்பினாலும் தெரியும் மார்கல்லா மலைகளின் அமைதியான சூழலும் தன் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்லாமாபாத்தில் உள்ள ஒரு சர்வதேசப் பள்ளியில் படித்த ஹர்ஷ்நீத், அங்கு நடைபெற்ற பாகிஸ்தான் சுதந்திர தினக் கொண்டாட்டங்களின் போது ஒட்டகங்கள் மற்றும் பசுக்கள் போன்ற விலங்குகளைப் பள்ளி வளாகத்திற்குள் கொண்டு வந்து மாணவர்களை மகிழ்வித்த விசித்திரமான கலாச்சார நிகழ்வுகளையும் நினைவுகூர்ந்துள்ளார்.
தற்போது இந்த வீடியோ 2 லட்சத்திற்கும் அதிகமான வியூஸ்களைக் கடந்து வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்கள் பலரும் தங்களின் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
View this post on Instagram
“>
“இரு நாட்டு மக்களுமே பரஸ்பர அன்பும் மரியாதையும் கொண்டவர்கள், அரசியல் தான் எல்லாவற்றையும் கெடுக்கிறது” என்று ஒரு பயனரும், “நாம் அனைவரும் ஒரே மக்கள், காலனித்துவத்தால் தான் பிரிக்கப்பட்டோம்” என்று மற்றொரு பயனரும் தங்களின் ஆதங்கத்தையும் ஒற்றுமையின் அவசியத்தையும் கமெண்ட்டுகளில் பதிவிட்டுள்ளனர்.
