அமெரிக்காவில் வசித்து வரும் ராகுல் மிஸ்ரா என்ற இந்தியர், அங்குள்ள நடுத்தர மக்களின் சொகுசு வாழ்க்கை முறை குறித்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அந்த வீடியோவில், தன்னைச் சுற்றியிருக்கும் ஆடி உள்ளிட்ட பல ஆடம்பரக் கார்களைக் காட்டும் ராகுல், “இவை அனைத்தும் இங்கு சாதாரண 9 டூ 5 மணி வரையில் வேலை பார்க்கும் சாமானியர்களுக்குச் சொந்தமானவை. அமெரிக்காவில் பெரிய தொழிலதிபராகவோ அல்லது நிறுவனங்களின் உயர் பதவிகளிலோ இல்லாவிட்டாலும், ஒரு சாதாரண ஊழியரால் கூட சொகுசு கார் வாங்க முடியும்;
View this post on Instagram
நல்ல வீட்டில் வசித்து வார இறுதி நாட்களைச் ஜாலியாகக் கழிக்க முடியும்” என்று கூறியுள்ளார். மேலும், இந்தியாவில் நள்ளிரவு வரையோ அல்லது வார இறுதி நாட்களிலோ உழைத்தாலும், சாமானியர்களால் இந்த வாழ்க்கைத்தரத்தைப் பெற முடியுமா? என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார்.
ராகுலின் இந்த ஒப்பீடு சமூக வலைத்தளவாசிகள் மத்தியில் காரசாரமான விவாதப் பொருளாக மாறியுள்ளது. இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் பலரும் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். இந்தியாவின் வருமானத்திற்கும் சொத்து மதிப்புகளுக்கும் இடையே உள்ள மிகப்பெரிய இடைவெளியே இதற்குக் காரணம் என்றும், இந்தியாவில் 9 டூ 5 வேலை என்பது நடைமுறையில் 9 டூ 9 வேலையாக மாறிவிடுவதாகவும் ஒரு தரப்பினர் ஆதங்கப்படுகின்றனர்.
அதேநேரம், அமெரிக்காவில் கார்கள் மலிவாகக் கிடைத்தாலும், அங்குள்ள மருத்துவச் செலவுகள், வாடகை மற்றும் வரி விதிப்புகள் மிக அதிகம் என்றும், கடனில் கார் வாங்குவது பொருளாதார சுதந்திரமாகாது என்றும் மற்றொரு தரப்பினர் நிதர்சனத்தைச் சுட்டிக்காட்டி வருகின்றனர். இந்த வீடியோ தற்போதைய இளைஞர்களின் வெளிநாட்டு மோகத்தைப் பிரதிபலிப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
