தமிழகத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பின், ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்திற்கும் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவிற்கும் இடையே அரசியல் ரீதியிலான மோதல் முற்றியுள்ளது.
சேலத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, தவெக அரசை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். ‘நடந்து முடிந்த தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
பொதுவாக ஒரு நாற்காலிக்கு நான்கு கால்கள் இருக்கும்; அதில் இரண்டு கால்கள் மட்டும்தான் அவருடைய (முதலமைச்சரின்) சொந்தக் கால்கள். மற்ற இரண்டு கால்களும் திமுகவின் தயவால் வெற்றி பெற்ற கூட்டணிக் கட்சிகள் கொடுத்த இரவல் கால்களாகும்.
அந்த இரண்டு கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு கால்கள் சற்று நகர்ந்தால் கூட, தவெகவின் ஆட்சி நாற்காலி தானாகவே சரிந்து விழுந்துவிடும்’ என்று எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காட்டினார். தவெகவின் 108 இடங்கள் தனிப்பெரும்பான்மைக்குக் குறைவு என்பதால், திமுக கூட்டணியில் இருந்து பிரிந்து வந்த கட்சிகளின் ஆதரவை நம்பியே தவெக ஆட்சி சக்கரம் சுழல்கிறது என்ற அரசியல் எதார்த்தத்தை முன்வைத்து இபிஎஸ் பேசியுள்ள இந்த நாற்காலி விவஹாரம், தமிழக அரசியல் வட்டாரங்களில் தற்பொழுது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.”
