தமிழகத்தில் தெருநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், நடப்பாண்டின் முதல் 5 மாதங்களில் மட்டும் ஒட்டுமொத்த மாநிலத்தையும் அதிரவைக்கும் அளவிலான அதிர்ச்சி புள்ளிவிவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

தமிழ்நாட்டில் கடந்த 5 மாதங்களில் மட்டும் சுமார் 3,25,523 பேர் நாய் கடியால் கொடூரமாகப் பாதிக்கப்பட்டுள்ளதோடு, வெறிநாய் கடிக்கு ஆளாகி சிகிச்சை பலனின்றி 17 பேர் தங்களது உயிரையே இழந்துள்ள கொடூரம் அரங்கேறியுள்ளது.

இந்த நாய் கடி பாதிப்பில் மாவட்ட வாரியாகப் பார்க்கும்போது, அதிகபட்சமாகச் சேலம் மாவட்டத்தில் 18,905 பேரும், அதற்கு அடுத்தபடியாகத் திருச்சி மாவட்டத்தில் 16,055 பேரும் நாய் கடியால் குதறப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதேநேரம், மாநிலத்திலேயே மிகக் குறைந்தபட்ச பாதிப்பாக மலை மாவட்டமான நீலகிரியில் 1,492 பேர் நாய் கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வீதிகளில் நடந்து செல்லும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் அச்சுறுத்தி வரும் இந்தத் தெருநாய்கள் பிரச்சினைக்குத் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தவெக அரசு உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என்று பொதுமக்கள் அலறியடித்துக் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.