கேரள மாநிலத்தை சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவருக்கு மாடலிங் துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. இதனைப் பயன்படுத்திக் கொண்ட சிந்து மற்றும் அலினா என்ற இரண்டு பெண்கள், தங்களுக்கு மாடலிங் துறையில் நல்ல செல்வாக்கு இருப்பதாகக் கூறி அந்த இளம்பெண்ணை துபாய்க்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
ஆனால், அங்கு சென்றதும் அந்தப் பெண்கள் இருவரும் இளம்பெண்ணைப் பாலியல் கும்பல் ஒன்றிடம் விற்று ஒப்படைத்துள்ளனர். அங்கே அந்த இளம்பெண்ணுக்குப் போதை மருந்து கொடுத்துப் பலரால் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்து சித்ரவதை செய்யப்பட்டுள்ளார். மேலும், அதனை வீடியோவாக எடுத்து அந்தப் பெண்கள் மிரட்டலிலும் ஈடுபட்டுள்ளனர்.
ஒருகட்டமாக, அந்தப் பாலியல் கும்பலின் பிடியில் இருந்து தப்பித்துக் கேரளா வந்து சேர்ந்த அந்த இளம்பெண், தன்னைச் சீரழித்த சிந்து மற்றும் அலினா மீது போலீஸ் நிலையத்தில் பரபரப்புப் புகார் அளித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட இளம்பெண் போலீசாரிடம் அளித்த புகாரில், தன்னைப்போலவே ஏராளமான இந்திய இளம்பெண்கள் மாடலிங் மற்றும் வேலை வாய்ப்பு என்ற பெயரில் துபாய்க்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு கொடூரமான முறையில் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக மிக அதிர்ச்சியூட்டும் தகவலைத் தெரிவித்துள்ளார்.
இந்தப் புகாரின் பேரில் உடனடியாக வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். முதற்கட்டமாக கொச்சியில் பதுங்கியிருந்த அலினாவைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், மும்பையில் தலைமறைவாக இருந்த மற்றொரு பெண் குற்றவாளியான சிந்துவையும் போலீசார் கைது செய்தனர்.
இவர்களிடம் நடத்தப்பட்ட அடுத்தகட்ட விசாரணையில், சர்வதேச அளவில் செயல்படும் இந்த மனிதக் கடத்தல் மற்றும் பாலியல் கும்பல் விவகாரத்தில் இன்னும் பல முக்கியப் புள்ளிகளுக்குத் தொடர்பு இருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அவர்கள் யார் என்பது குறித்துப் போலீசார் தற்போது தீவிரமாகத் தகவல்களைச் சேகரித்து வருகின்றனர்.
