உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் சகேரி பகுதியில், பெற்றோர் இல்லாத அனாதை இளம்பெண்ணை அவரது சித்தி மற்றும் மாமாவே சேர்ந்து ஏமாற்றி, மாந்திரீகம் செய்வதாகக் கூறி பலாத்காரம் செய்ய வைத்த கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பெற்றோர் இறந்த பிறகு தஞ்சம் புகுந்த தனது சித்தியையே (தாயின் தங்கை) அந்தப் பெண் தாயாக நினைத்து வாழ்ந்து வந்துள்ளார். அந்தப் பெண்ணிற்குத் திருமணம் செய்து வைத்த சித்தி, பின்னாளில் அவர் மீது ஏதோ செய்வினை, சூனியம் இருப்பதாகக் கூறி பயமுறுத்தியுள்ளார்.
இதைத் தொடர்ந்து, ‘லாலா’ என்ற போலி மாந்திரீகவாதியை (தாந்த்ரீக்) வீட்டுக்கு வரவழைத்து, பில்லி சூனியம் எடுப்பதாகக் கூறி அந்தப் பெண்ணை சித்தியே கட்டாயப்படுத்திப் பலாத்காரம் செய்ய வைத்துள்ளார்.
மேலும், அந்தப் பலாத்காரக் கொடுமையை ரகசியமாக வீடியோ எடுத்த சித்தியும் மாமாவும், அதை வைத்து அந்தப் பெண்ணை மிரட்டத் தொடங்கியுள்ளனர்.
“உன் கணவனுக்கு இந்த வீடியோவை அனுப்பிவிடுவோம்” என்று மிரட்டி, பெண்ணின் புகுந்த வீட்டிலிருந்து இதுவரை ₹1.5 லட்சம் பணத்தைப் பறித்துள்ளனர்.
ஒருகட்டத்தில், பணத்தாசை பிடித்த சித்தி அந்தப் பெண்ணைக் கட்டாயப் பாலியல் தொழிலில் தள்ள முயன்றபோது, பொறுக்க முடியாமல் தனது கணவரிடம் அனைத்து உண்மைகளையும் அந்தப் பெண் உடைத்துள்ளார்.
கணவரின் ஆதரவோடு கான்பூர் போலீஸ் கமிஷனரிடம் பாதிக்கப்பட்ட பெண் அளித்த அதிரடி புகாரின் பேரில், சகேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து சித்தி உஸ்மா பர்வீன் மற்றும் மாமா சக்கீல் மீது தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
