தமிழக வெற்றிக் கழகம் தனது தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டிருந்தபடி, மகளிருக்கான மாதாந்திர உதவித்தொகையை ₹2,500 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தவெக அரசை அதிரடியாக வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தவெக அரசு அமைந்துள்ள போதிலும், முந்தைய திமுக அரசு வழங்கி வந்த கலைஞர் மகளிர் உரிமைத் தொகையான ₹1,000 இந்த மாதமும் தடையின்றி மகளிரின் வங்கித் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், தவெக அரசு தனது தேர்தல் பிரச்சாரத்தில் அறிவித்தபடி ₹2,500 தொகையை எப்போது வழங்கும் என்ற பலத்த எதிர்பார்ப்பு இல்லத்தரசிகள் மத்தியில் எழத் தொடங்கியுள்ளது.
முன்னதாக, மாநிலத்தின் தற்போதைய நிதி நிலைமையைக் காரணம் காட்டி, தங்களது தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற தங்களுக்குக் கூடுதல் அவகாசம் தேவை என முதலமைச்சர் விஜய் பொதுமக்களுக்கு உருக்கமான வேண்டுகோள் விடுத்திருந்தார்.
ஆனால், “ஆட்சிக்கு வந்தாச்சு.. அப்புறம் என்ன அவகாசம்?” என்ற பாணியில் எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துள்ளன. சொன்ன வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்றி மகளிருக்கு மாதம் ₹2,500 வழங்க வேண்டும் எனப் பிரேமலதா உள்ளிட்ட தலைவர்கள் தவெக அரசுக்கு அடுத்தடுத்து மெகா பிரஷர் கொடுக்கத் தொடங்கியுள்ளது கோட்டை வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
