தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்து முதலமைச்சராக விஜய் பதவியேற்றுள்ள நிலையில், எதிர்க்கட்சியான திமுக தவெக அரசை நோக்கித் தனது விமர்சனக் கணைகளைத் தொடுக்கத் தொடங்கியுள்ளது.

தவெகவினர் நிஜ உலகத்தை உணராமல் ஒருவித மாய உலகத்தில் வாழ்ந்து வருவதாகத் திமுக முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு மிகக் கடுமையான சாடலை முன்வைத்துள்ளார்.

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில் ஒரு பொய்யைத் திரும்பத் திரும்பச் சொன்னால் அதை உண்மையாக்கிவிடலாம் எனத் தவெகவினர் தப்புக் கணக்கு போடுவதாகக் குறிப்பிட்ட அவர், ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகும் மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்ற எந்தவொரு புரிதலும் இல்லாமல் தவெக அரசு தடுமாறி வருவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

முன்னதாக, தவெக அமைச்சர் கீர்த்தனா பேசும்போது, “முந்தைய திமுக அரசு பத்தரை லட்சம் கோடி ரூபாய் கடனை வைத்துவிட்டு ஒட்டுமொத்தமாகத் துடைத்துத் துடைத்துக் கழுவிவிட்டுப் போய்விட்டது” என்று பேசியிருந்தார்.

அமைச்சரின் இந்த பேச்சுக்குக் கடந்த சில தினங்களுக்கு முன்பே கடும் கண்டனம் தெரிவித்திருந்த தங்கம் தென்னரசு, நிதி நிர்வாகம் குறித்து எள்ளளவும் அடிப்படை அறிவோ புரிதலோ இல்லாமல், போகிற போக்கில் உண்மைக்கு மாறான பொய்களைப் பேசிவிட்டுச் செல்வது முறையல்ல என்று விளாசியிருந்தார்.

தேர்தலுக்கு முன்பு வரை தவெகவை பெரிதாகக் கண்டுகொள்ளாத திமுக, தற்போது எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்த பிறகு தவெக அரசின் ஒவ்வொரு அசைவையும், குறிப்பாக நிதி மேலாண்மை குறித்த விமர்சனங்களையும் தீவிரமாகக் கையில் எடுத்து வருவது தமிழக அரசியல் களத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.