அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே எந்த நேரத்திலும் போர் வெடிக்கக்கூடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் சூசகமாகத் தெரிவித்துள்ளார். அமெரிக்க ராணுவம் ஒருமுறை ஈரானைத் தாக்குவதற்கு வெறும் ஒரு மணி நேர தூரத்தில் இருந்ததாகக் குறிப்பிட்ட அவர், கடற்படைக் கப்பல்கள் ஏவுகணைகளுடன் தயாராக நின்றதாகவும் கூறினார்.

வளைகுடா நாடுகளின் வேண்டுகோளுக்கு இணங்கவே அந்தத் தாக்குதல் ஒத்திவைக்கப்பட்டதாகத் தெரிவித்த டிரம்ப், தற்போது ஈரான் ஒரு சமாதான ஒப்பந்தத்திற்காக தன்னிடம் கெஞ்சி வருவதாகவும், ஒருவேளை உடன்பாடு ஏற்படாவிட்டால் ஈரான் மீது மற்றொரு பெரிய தாக்குதலைத் தொடுக்க அமெரிக்க ராணுவம் முழுமையாகத் தயாராக உள்ளதாகவும் எச்சரித்துள்ளார்.

ட்ரம்பின் இந்த அதிரடி அறிக்கை உலகளவில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியதோடு, சர்வதேசக் கப்பல் போக்குவரத்து மற்றும் பணவீக்கத்திலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில், அமெரிக்காவின் எந்தவொரு ராணுவத் தாக்குதலையும் எதிர்கொள்ளத் தங்கள் நாடு முழு பலத்துடன் தயாராக இருப்பதாக ஈரானின் துணை வெளியுறவு அமைச்சர் காசெம் கரிபாபாடி தெரிவித்துள்ளார்.

டிரம்ப் தாக்குதலை ஒத்திவைத்ததாகக் கூறுவது அச்சுறுத்தலை அமைதிக்கான வாய்ப்பாகத் தவறாகப் புரிந்துகொள்வதாகும் என்று விமர்சித்த அவர், ஒன்றுபட்ட ஈரான் எந்தவொரு சவாலையும் சமாளிக்கும் என்று எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஈரானுக்கு மேலும் இரண்டு முதல் மூன்று நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்குள் ஒரு சுமுகமான உடன்பாடு எட்டப்பட வாய்ப்புள்ளதாகவும் வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.