சீனாவின் வாங்டாங் மாகாணத்தில் உள்ள ஒரு குடியிருப்பு பகுதியில், அக்கம் பக்கத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்திய வினோத சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர், தனது பக்கத்து வீட்டில் இருந்து மனித பிணம் அழுகிப்போனால் வீசும் கடுமையான துர்நாற்றம் வருவதாக உணர்ந்து உடனடியாகக் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், அந்த வீட்டில் ஏதோ அசம்பாவிதம் நடந்துவிட்டது என்ற சந்தேகத்துடன் தீவிர விசாரணை மேற்கொண்டனர். சந்தேகத்திற்குரிய அந்த வீட்டின் கதவைத் தட்டி உள்ளே சென்று சோதனையிட்ட போதுதான் அங்கு நடந்த உண்மையான பின்னணி வெளிச்சத்திற்கு வந்து அதிகாரிகளை வியப்பில் ஆழ்த்தியது.
அந்த வீட்டில் வசித்து வரும் பெண்மணி, சமையலுக்காக ‘ஸ்டிங்கி ஃபார்ட் வினிகர்’ (Stinky fart vinegar) என்ற ஒரு சிறப்பு வகை வினிகரைப் பயன்படுத்தியது தெரியவந்தது. மிகக் கடுமையான துர்நாற்றம் வீசக்கூடிய இந்த வினிகரைச் சமையலில் சேர்த்தபோதே, அது பக்கத்து வீடு வரை பரவி பிண நாற்றம் போன்ற துர்நாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் பயன்படுத்தப்படும் இந்த வகை வினிகர், சமைக்கும் போது மிகவும் கெட்ட வாடையை வீசினாலும், அது பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்டது என்பது சீன மக்களின் ஆழமான நம்பிக்கையாக உள்ளது.
பிணம் அழுகிய நாற்றம் என்று நினைத்து போலீசுக்கு போன் செய்து பரபரப்பை ஏற்படுத்திய இந்தச் சம்பவம், இறுதியில் சமையல் வினிகரால் வந்த கூத்து என்பது தெரியவந்ததும் காவல்துறை அதிகாரிகள் முதல் பொதுமக்கள் வரை அனைவரும் பெருமூச்சு விட்டனர். இந்த வினோத செய்தி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
