கிழக்கு சீனாவில் உள்ள ஒரு பரபரப்பான நெடுஞ்சாலையில் வீசிய சக்திவாய்ந்த சூறாவளி மற்றும் புயலின் காரணமாக, கார்கள் பொம்மைகளைப் போல காற்றில் தூக்கி வீசப்பட்ட அதிர்ச்சி தரும் டேஷ்கேம் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

இந்த பயங்கர புயலில் சிக்கிய வாகன ஓட்டிகள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அங்கும் இங்கும் சிதறி ஓடினர். இந்த இயற்கை சீற்றத்தின் விளைவாக, யுஎச்சிங் கடலோர நகரில் 1,300-க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்து சாலைப் போக்குவரத்தையும் சொத்துக்களையும் கடுமையாகப் பாதித்தன.

மேலும், ஷாங்காயின் முக்கிய சர்வதேச விமான நிலையங்களான புடாங் மற்றும் ஹாங்ஜியாவோ ஆகியவற்றில் 600-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இந்த புயல் சீற்றத்தின் தாக்கம் தைவான் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தைவானில் வீசிய பலத்த காற்று மற்றும் மழையினால் ஏற்பட்ட விபத்துக்களில் 134-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இதில் பெரும்பாலானோர் வலுவான காற்று மற்றும் வழுக்கும் சாலைகளால் மோட்டார் சைக்கிள்களில் இருந்து கீழே விழுந்து காயமடைந்தவர்கள் ஆவர். உடனடியாக மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காகச் சுமார் 29,000 ராணுவ வீரர்கள் களமிறக்கப்பட்டனர்.

அதே நேரத்தில், ஹூபே மாகாணத்தின் எஜோவ் பகுதியில் மணிக்கு 160 மைல் சுமார் 257 கி.மீ வேகத்தில் வீசிய சுழல்காற்று அப்பகுதியை நிலைகுலைய வைத்தது. வழக்கமாக இப்பகுதியில் சூறாவளி வீசுவது மிகவும் அரிதான ஒன்று என்பதால் மக்கள் கடுமையான பீதியடைந்தனர்.

மேலும், தொடர்ந்து பெய்த கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கின் காரணமாகப் பல்வேறு பகுதிகளில் கடுமையான உயிரிழப்புகளும் சேதங்களும் பதிவாகியுள்ளன. தெற்கு நகரமான நான்னிங் பகுதியில் நதிகள் மற்றும் நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழிந்ததால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி குறைந்தது நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஹைனான் மாகாணம் மற்றும் வியட்நாமின் எல்லை நகரமான மோங் காய் ஆகியவற்றிலும் கட்டிடங்களின் கூரைகள் பறந்து, மரங்கள் கூண்டோடு சாய்ந்து பெரும் சேதம் ஏற்பட்டது. இந்த சக்திவாய்ந்த புயல் குவாங்சி பகுதியை நோக்கி நகர்ந்து வருவதால், அப்பகுதி மக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

“>