இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) கீழ் இயங்கும் ஐபிஎல் தொடரின் முன்னாள் தலைவரான லலித் மோடி, தான் மீண்டும் இந்தியா திரும்புவது குறித்து எழுந்துள்ள பல்வேறு வதந்திகளுக்குத் தெளிவான விளக்கம் அளித்துள்ளார். தான் தொடர்ந்து லண்டனிலேயே வசிக்கப் போவதாகவும், தேவைப்படும் போது மட்டுமே இந்தியாவிற்கு வந்து செல்லப் போவதாகவும் அவர் வெளியிட்டுள்ள புதிய வீடியோ பதிவில் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த 2009-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடத்தப்பட்ட ஐபிஎல் தொடர் தொடர்பான சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை மற்றும் நிதி முறைகேடு வழக்குகளில், லலித் மோடி மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன. இந்த நீண்டகால வழக்கின் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், SAFEMA (வெளிநாட்டு செலாவணி மற்றும் சொத்து பறிமுதல் சட்டம்) அமைப்பின் கீழ் இயங்கும் மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம், லலித் மோடிக்கு ஆதரவாக அண்மையில் தீர்ப்பு வழங்கியது.
இந்த சாதகமான தீர்ப்பு வெளியான அடுத்த நாளே லலித் மோடி தனது இந்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பு தனக்குக் கிடைத்த மிகப்பெரிய நீதியாகவும் வெற்றி என்றும் குறிப்பிட்டுள்ள அவர், இதன் மூலம் தன் மீதான நீண்டகாலக் குற்றச்சாட்டுகளுக்கு விடை கிடைத்துள்ளதாகக் கூறியுள்ளார்.
இருப்பினும், வழக்கு முடிவுக்கு வந்துவிட்டதால் அவர் உடனடியாக இந்தியா திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், “நான் லண்டனிலேயே தொடர்ந்து வசிப்பேன்; ஆனால் இந்தியாவிற்கு வந்து செல்வேன்” எனத் தெரிவித்து, இந்தியா திரும்புவது குறித்த விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். லலித் மோடியின் இந்த வீடியோ பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
