ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர தொடக்க ஆட்டக்காரரும், உலகம் முழுதும் உள்ள டி20 லீக் தொடர்களின் முன்னணி வீரருமான டேவிட் வார்னர், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய குற்றச்சாட்டை நீதிமன்றத்தில் முறைப்படி ஒப்புக்கொண்டுள்ளார். சிட்னியில் உள்ள உள்ளூர் நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையின் போது, தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை அவர் ஏற்றுக்கொண்டது சர்வதேச கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாகனச் சோதனையின் போது காவல்துறையினரால் மறிக்கப்பட்ட டேவிட் வார்னருக்கு மேற்கொள்ளப்பட்ட சுவாசப் பரிசோதனையில், அவரது ரத்தத்தில் மதுவின் அளவு 0.104 ஆக பதிவாகியிருந்தது. ஆஸ்திரேலிய சட்டப்படி அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் இது இரண்டு மடங்குக்கும் அதிகமாகும். இதையடுத்து அவர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், நீதிமன்றத்தில் தனது வழக்கறிஞர் மூலமாக வார்னர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்தச் சம்பவம், ஆஸ்திரேலியாவின் பிக் பேஷ் லீக்  தொடரில் சிட்னி தண்டர் அணியின் கேப்டனாகச் செயல்பட்டு வரும் டேவிட் வார்னரின் தலைமைப் பதவிக்கு மிகப்பெரிய கேள்விக்குறியை உருவாக்கியுள்ளது. குறிப்பாக, சிட்னி தண்டர் கிரிக்கெட் கிளப் அரசோடு இணைந்து மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதற்கு எதிரான சமூக விழிப்புணர்வுப் பிரச்சாரங்களில் தீவிரமாக ஈடுபட்டு வரும் சூழலில், அந்த அணியின் கேப்டனே இத்தகைய குற்றத்தில் சிக்கியுள்ளது நிர்வாகத்திற்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த காலங்களில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி, தலைமைப் பொறுப்பேற்கத் தடைகளைச் சந்தித்து பின்னர் அதிலிருந்து மீண்டு வந்த வார்னருக்கு, இந்த புதிய சட்டவிரோதச் செயல் மிகப்பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து சிட்னி தண்டர் அணி நிர்வாகம் தீவிரமாக ஆலோசனை நடத்தி வரும் நிலையில், டேவிட் வார்னரின் கேப்டன் பதவி பறிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.