அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தில் உள்ள மெக்னீஸ் மாநிலப் பல்கலைக்கழகத்தில் இயற்கை அறிவியல் படிப்பை முடித்த 22 வயது மாணவி கேட் டேலி, தனது பட்டமளிப்பு நினைவாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பலரையும் திகைக்க வைத்துள்ளன.
மற்றவர்கள் நண்பர்களுடனும் குடும்பத்தினருடனும் புகைப்படம் எடுக்கும் வேளையில், கேட் 14 அடி நீளமுள்ள ‘பிக் அல்’ என்ற பிரம்மாண்ட முதலையுடன் தண்ணீருக்குள் இறங்கி, அதன் மூக்கின் மீது தனது பட்டமளிப்புத் தொப்பியை வைத்தும், அதன் திறந்த தாடையில் முத்தமிட்டும் தைரியமாகப் போஸ் கொடுத்துள்ளார்.
முதல் பார்வையில் இது ஆபத்தான சாகசமாகத் தோன்றினாலும், கேட் சாதாரண பெண் அல்ல; அவர் தனது வருங்காலக் கணவருடன் சேர்ந்து டெக்சாஸில் ‘கேட்டர் கண்ட்ரி’ என்ற பெயரில் சுமார் 450 முதலைகளைக் கொண்ட வனவிலங்கு மீட்புப் பூங்காவை நடத்தி வருகிறார்.
தனது 7 வயதிலிருந்தே வனவிலங்கு மீட்புப் பணியில் ஈடுபட்டு வரும் கேட், இந்த விலங்குகள் தன் வாழ்க்கையில் எவ்வளவு முக்கியமானவை என்பதை உலகிற்குக் காட்டவே இப்படிச் செய்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் தனித்துவமான படப்பிடிப்பை நடத்திய புகைப்படக் கலைஞர் லாரா, மனிதர்களுடன் பழகி நன்கு பயிற்சி பெற்ற அந்த முதலையைக் கண்டு தனக்கு பயமில்லை என்றும், ஆனால் கேட் திடீரென ‘டிம்பர் ராட்டில்ஸ்னேக்’ என்ற விஷப் பாம்பை கையில் தூக்கியபோதுதான் தான் பயந்துபோய் ஜூம் லென்ஸைப் பயன்படுத்தியதாகவும் கூறியுள்ளார்.
View this post on Instagram
“>
திரைப்படங்களில் முதலைகள் வில்லன்களாகக் காட்டப்பட்டாலும், மனிதர்கள் அவற்றின் எல்லைக்குள் அத்துமீறாத வரை அவை தீங்கற்றவை என்று கூறும் கேட்டின் இந்த விசித்திரமான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
