சேலம் மாவட்டத்தில் , குடிகாரத் தந்தையின் பொறுப்பற்ற தன்மையால் சாப்பாட்டிற்கு வழியில்லாமல் வறுமையில் வாடிய பாட்டியும், அவரது 20 வயது மாற்றுத்திறனாளிப் பேத்தியும் வீட்டின் வளாகத்தில் உள்ள கிணற்றில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சோகச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்கள் அம்மணி (60) மற்றும் அவரது பேத்தியான மாற்றுத்திறனாளி சதாஸ்ரீ (20) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் உருக வைக்கும் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. அம்மணியின் மகன் ராஜசேகர் என்பவருக்குக் கடுமையான குடிப்பழக்கம் இருந்துள்ளது. அவர் குடும்பச் செலவிற்குச் சரியாகப் பணம் தராததால், அவரது மனைவி ஆரணி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே கணவர் மற்றும் மகளைப் பிரிந்து சென்றுவிட்டார். இதனால், மனநிலை சற்று பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிப் பெண் சதாஸ்ரீயைக் குடும்ப வறுமைக்கு இடையேயும் அவரது பாட்டி அம்மணி தான் மிகவும் சிரமப்பட்டுப் பராமரித்து வந்துள்ளார்.

ஆனாலும், ராஜசேகர் தொடர்ந்து வேலைக்குச் செல்லாமல் குடித்துவிட்டு ஊதாரியாகச் சுற்றி வந்ததால், வீட்டில் கடுமையான உணவுப் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான பாட்டி அம்மணி, பேத்தியுடன் தற்கொலை செய்ய முடிவெடுத்துள்ளார். அதன்படி, நேற்றிரவு கிணற்றின் மேல் விட்டத்தில் சேலையைக் கட்டி, அதனைப் பேத்தியின் கழுத்தில் மாட்டி முதலில் கிணற்றுக்குள் தொங்கவிட்டுள்ளார். பின்னர், தானும் மற்றொரு சேலையைக் கழுத்தில் கட்டிக்கொண்டு கிணற்றுக்குள் குதித்து உயிரை மாய்த்துக் கொண்டது தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்