திண்டுக்கல் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் மகாலில் நேற்று‌ முன்தினம் நடைபெற்றது. இக்கூட்டம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார்.

அப்போது அவர் பேசுகையில், “கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையை முழுமையாக ஏற்பவர்கள் அனைவரும் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களின் ஆதரவுக் கையெழுத்தை இட்டுள்ளனர்; இதன் மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின்ஆதரவு என்பது 100 சதவீதம் உறுதியாக இருக்கிறது” என்று மிக ஆணித்தரமாகத் தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்கள் நத்தம் விசுவநாதன் மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணியில் இணைவாரா?’ என்று கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், “அதைப்பற்றி நத்தம் விசுவநாதனிடம் தான் கேட்க வேண்டும்; எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஏற்க மறுப்பவர்கள் வேறு ஏதேனும் அரசியல் ஆதாயம் பெற நினைக்கலாம்.

அதுகுறித்தும் அவர்களிடம் தான் கேட்க வேண்டும், என்னிடம் கேட்பது முறையல்ல, நான் ஒன்றும் ஜோதிடர் அல்ல, எனக்குத் தெரியாது” என்று தனது பாணியில் மழுப்பலாகப் பதிலளித்தார். மேலும், கட்சிக்குத்துரோகம் செய்துவிட்டு வேறு அணிக்குச் சென்றவர்கள் மீது சட்டப்படி வழக்குப்பதிவு செய்ய அ.தி.மு.க. தலைமை எப்போதும் தயாராகவே இருக்கிறது என்றும் அவர் எச்சரித்தார்