தமிழகத்திற்கு வருகை தந்துள்ள இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், நாம் தமிழர் கட்சி மற்றும் அதன் ஒருங்கிணைப்பாளர் சீமான் குறித்து அண்மையில் விமர்சனங்களை முன்வைத்திருந்தார். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மிகக் காரசாரமாகப் பேசியுள்ளார்.
மறைமலைநகரில் நடைபெற்ற ‘தமிழ்ப்பேரின எழுச்சிப் பொதுக்கூட்டத்தில்’ கலந்து கொண்டு சீமான் பேசியதாவது, என் தலைவன் நின்ற திசை தெரியாது. இலங்கையிலிருந்து இங்கே வந்திருக்கும் அந்த நபருக்கு தமிழீழம் எங்குள்ளது? அது தெற்கே இருக்கிறதா அல்லது வடக்கே இருக்கிறதா என்று கூடத் தெரியாது. என் உயிர் தலைவன் (பிரபாகரன்) நின்ற திசை கூடத் தெரியாதவர்கள் எல்லாம் என்னை விமர்சிப்பது வேடிக்கையாக உள்ளது.
தொடர்ந்து கட்சியின் வளர்ச்சி மற்றும் தேர்தல் தோல்விகள் குறித்துப் பேசிய சீமான் “நான் ஒன்றும் அதிகாரத்தில், ஆட்சியில் இருந்துவிட்டுப் பிறகு தோற்கடிக்கப்படவில்லை. நாம் முதலிலிருந்தே தோற்றுத்தானே களத்தில் நின்று போராடி வருகிறோம். ஆரம்பத்தில் வெறும் முட்டை (பூஜ்யம்) என்ற புள்ளியில் தொடங்கினோம். பிறகு 18 லட்சம், 30 லட்சம், 36 லட்சம் வாக்குகளைப் பெற்றோம்.
தற்போது 20 லட்சம் வாக்குகளைப் பெற்றிருக்கிறோம். நாளை இதுவே ஒரு கோடியே 80 லட்சம் வாக்குகளாக மாறும். இதில் என்ன கெட்டுப் போய்விட்டது? இன்னும் கொஞ்சக் காலம் பொறுத்திருங்கள், என்னைச் சமாளிக்க நீங்கள் அனைவரும் மிகவும் கஷ்டப்படுவீர்கள். ஏனென்றால், நான் இப்போது அடங்க முடியாத வெறியோடு களத்தில் இருக்கிறேன்.
அப்போது நீங்களே என்னைத் தேடி வருவீர்கள் என்று சீமான் மிகவும் ஆக்ரோஷமாகப் பேசினார்.
சீமானின் இந்த அதிரடிப் பேச்சு நாம் தமிழர் கட்சித் தொண்டர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
