தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அ.தி.மு.க.வுக்குள் உட்கட்சிப் பூசல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், கட்சியின் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்குத் தனது ஆதரவை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார். இந்த அதிரடி திருப்பம் இ.பி.எஸ். தரப்பிற்குப் பெரும் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் தோல்விக்குப் பிறகு அ.தி.மு.க. இரண்டு தனித்தனி அணிகளாகப் பிரிந்து செயல்பட்டு வருகிறது. ஒருபுறம் எடப்பாடி பழனிசாமியும், மறுபுறம் எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் தரப்பும் தீவிர அரசியல் நகர்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக, எஸ்.பி.வேலுமணி தரப்பினர் கட்சியின் பொதுக்குழுவைக் கூட்டுவதற்குத் தீவிரமான முயற்சிகளையும், ஏற்பாடுகளையும் செய்து வருகின்றனர்.

இதனால் அ.தி.மு.க. தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் கடுமையான பதற்றமும், பரபரப்பான சூழலும் நிலவி வருகிறது. அதிமுகவின் சட்டதிட்டங்களின்படி, பொதுக்குழுவைக் கூட்டுவதற்கும் அதற்கான அனுமதியை வழங்குவதற்கும் முழு அதிகாரம் படைத்தவர் கட்சியின் அவைத்தலைவர் ஆவார். இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில், அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து மலர்க்கொத்து கொடுத்து தனது முழு ஆதரவையும் தெரிவித்துள்ளார்.

கட்சியின் பொதுக்குழுவை கூட்டும் உச்சபட்ச அதிகாரம் கொண்ட அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், எடப்பாடி பழனிசாமியின் பக்கமே நிற்பதாக அறிவித்துள்ளது, எஸ்.பி.வேலுமணி தரப்பிற்குப் பலத்த பின்னடைவாகவும், எடப்பாடி பழனிசாமிக்கு இந்த உட்கட்சிப் போரில் மிகப்பெரிய பலமாகவும் பார்க்கப்படுகிறது. இந்த திடீர் ஆதரவு, அதிமுகவின் அடுத்தகட்ட நகர்வுகளில் மிக முக்கிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என அரசியல் வட்டாரங்கள் கணிக்கின்றன.