தமிழகத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள சூழலில், வெறும் 47 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள அதிமுக-வுக்குள் தற்போது தலைமைப் பிளவு ஏற்பட்டு புயலைக் கிளப்பியுள்ளது.

எடப்பாடி பழனிசாமியின் தலைமைக்கு எதிராக முன்னாள் அமைச்சர்களான சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி ஆகியோர் பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கிக் குரல் எழுப்பி வருகின்றனர். தொடர் தோல்விகள் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்களின் எதிர்ப்பால் எடப்பாடி பழனிசாமி கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளார்.

மேலும், அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் பொதுக்குழுவைக் கூட்டி அவரது பொதுச்செயலாளர் பதவியைப் பறிக்கவும், சட்டமன்றத் தலைவர் பதவியைக் கைப்பற்றவும் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இந்த இக்கட்டான சூழ்நிலையில், “கட்சி என்றால் பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும், பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணலாம்” என்று அதிருப்தியாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வெளிப்படையாக அழைப்பு விடுத்துள்ளார்.

சசிகலா மற்றும் தினகரனை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என்ற சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி தரப்பின் கோரிக்கையை எடப்பாடி பழனிசாமி ஏற்பாரா அல்லது அதிமுக மேலும் பிளவுபடுமா என்ற பலத்த கேள்வி எழுந்துள்ளது.

இதற்கிடையே தவெக ஆட்சிக்கு அதிமுக-வின் 36 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவுக்கரம் நீட்டியுள்ள நிலையில், கட்சியின் எதிர்காலத்தைக் கருதி அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பதே தொண்டர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.