செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் ‘தமிழ்ப்பேரின எழுச்சி’ பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தற்போதைய அரசியல் சூழலையும் அதிகார வர்க்கத்தையும் அனல் பறக்கும் தத்துவ வரிகளால் சாடியிருப்பது சோசியல் மீடியாவில் பயங்கர வைரலாகி வருகிறது.
மேடையில் மைக் பிடித்துத் தனது வழக்கமான அதிரடி பாணியில் முழங்கிய சீமான், “இங்கே பேசாதவனைத் தூக்கி வைக்கிறார்கள், ஆனால் மக்களுக்காகப் பேசுபவனைத் தூக்கி எறிகிறார்கள்; அதிகாரம் என்பது மிகவும் வலிமையானதுதான், ஆனால் அது எப்போதுமே நிலையானது அல்ல” என்று ஆளுங்கட்சியினரை மறைமுகமாகத் தாக்கிப் பேசினார்.
தொடர்ந்து தனது பேச்சில், “7 அடி நீளம் நாம் முன்னோக்கித் தாண்ட வேண்டும் என்றால், அதற்கு 70 அடி பின்னே போய் ஓடி வர வேண்டியுள்ளது; அதேபோல், நமக்கு எளிதாகக் கிடைக்கும் எந்தவொரு பொருளுக்கும் எப்போதுமே மதிப்பு கிடையாது” என்று உணர்ச்சிப் பெருக்குடன் அவர் பேசிய தத்துவ வரிகள், தம்பிகளை மட்டுமன்றி ஒட்டுமொத்த அரசியல் வட்டாரத்தையும் சிந்திக்க வைத்துள்ளதோடு, இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
