அமெரிக்காவின் ஐடஹோ மாகாணத்தில் நடைபெற்ற வான்வழி சாகச நிகழ்ச்சியின் போது, அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான இரண்டு அதிநவீன போர் விமானங்கள் நடுவானில் மோதி விபத்துக்குள்ளாகின. எனினும், விமானத்தில் இருந்த 4 மாலுமிகளும் நொடிப் பொழுதில் பாராசூட் மூலம் குதித்து உயிர் தப்பியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
மேற்கு ஐடஹோவில் உள்ள ‘மவுண்டன் ஹோம்’ விமானப்படை தளத்தில் இந்த வான்வழி சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. நூற்றுக்கணக்கான பொதுமக்கள் முன்னிலையில் அமெரிக்க கடற்படையின் இரண்டு ‘EA-18G க்ரோலர்’ ரக போர் விமானங்கள் சாகசங்களைச் செய்து காட்டின. அப்போது, எதிர்பாராதவிதமாக இரண்டு விமானங்களும் நடுவானில் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
2x EA-18G Growlers of U.S. CRASHED 🚨 today after a midair collision at the Gunfighter Skies Airshow at Mountain Home Air Force Base in Idaho.
Footage shows that all the pilots have ejected safely. pic.twitter.com/UllhBRRDxS
— INTEL-24 (@Tracking_Live) May 18, 2026
இந்த விபத்து தொடர்பான அதிர்ச்சியூட்டும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. சாகசப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த அந்த இரண்டு போர் விமானங்களும் மோதிய அடுத்த கணமே தீப்பிடித்து எரியத் தொடங்கின. விமானம் முற்றிலும் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழத் தொடங்கிய சில விநாடிகளில், அதில் இருந்த 4 வீரர்களும் சாதுரியமாகச் செயல்பட்டு பாராசூட்டுகள் மூலம் வானில் இருந்து கீழே குதித்தனர். விமானங்கள் தரைமட்டமாவதற்குள் அவர்கள் பாதுகாப்பாக இறங்கிய காட்சிகள் பார்ப்போரை உறைக்கச் செய்துள்ளன.
மேலும் விபத்துக்குள்ளான போர் விமானங்கள் வாஷிங்டன் மாகாணத்தின் விட்பே தீவைச் சேர்ந்த 129-வது எலக்ட்ரானிக் அட்டாக் ஸ்குவாட்ரனைச் சேர்ந்தவை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவை போயிங் எஃப்/ஏ-18இ/எஃப் சூப்பர் ஹார்னெட் (Boeing F/A-18E/F Super Hornet) தளத்திலிருந்து உருவாக்கப்பட்ட மேம்பட்ட மின்னணு போர் விமானங்களாகும்.
