மத்தியப் பிரதேச மாநிலம் காண்ட்வா மாவட்டத்தில் உள்ள சுர்கான் ஜோஷி கிராமத்தில், தனது அத்தை வீட்டிற்கு வந்த 6 வயது சிறுவன் அவியை, 6-க்கும் மேற்பட்ட வெறிநாய்கள் கூட்டம் சூழ்ந்து கொண்டு கொடூரமாகக் கடித்துக் குதறிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மே 14-ஆம் தேதி மதியம் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த அச்சிறுவனை, வெறிநாய்கள் கூட்டம் கடித்துக் குதறியது மட்டுமின்றி, சுமார் 50 மீட்டர் தூரம் அருகில் இருந்த விளைநிலத்திற்குள் இழுத்துச் சென்றுள்ளன.
இதில் சிறுவனின் தலை மற்றும் உடல் முழுவதும் ஆழமான படுகாயங்கள் ஏற்பட்டு, மண்டை ஓட்டின் ஒரு பகுதி மற்றும் முடிகள் வெறிநாய்களால் பிடுங்கப்பட்டுள்ளன.
அந்த வழியே சென்ற முதியவர் ஒருவர் இதைப் பார்த்து சத்தம் போடவே, உறவினர்கள் ஓடிவந்து சிறுவனை மீட்டு காண்ட்வா மாவட்ட மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு நிலைமை மிகவும் மோசமடைந்ததால், சிறுவன் உடனடியாக இந்தூர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, அங்கு அவனுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இக்கிராமத்தில் நாய் தொல்லை நீண்ட நாட்களாக நீடிப்பதாகவும், அரசு ஆரம்பச் சுகாதார நிலையங்களில் நாய் கடிததற்கான ஆன்டி-ரேபிஸ் (Anti-Rabies) தடுப்பூசிகள் கூட பல நாட்களாகக் கையிருப்பில் இல்லை என்றும், ஏழை மக்கள் தனியார் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய அவலநிலை உள்ளதாகவும் கூறி நிர்வாகத்தின் அலட்சியப் போக்கிற்கு எதிராக கிராம மக்கள் தற்போது போராட்டத்தில் குதித்துள்ளனர்.
