மத்தியப் பிரதேச மாநிலம் காண்ட்வா மாவட்டத்தில், 6 வயது சிறுவனை 6-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் கூட்டமாகச் சேர்ந்து கொடூரமான முறையில் கடித்துக் குதறிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. அதாவது  அனில் படேல் என்பவரின் 6 வயது மகன் அவி. இந்தச் சிறுவன் சுர்கான் ஜோஷி கிராமத்தில் உள்ள தனது அத்தையின் வீட்டிற்கு வந்திருந்தான். கடந்த மே 14-ஆம் தேதி, மதியம் சுமார் 1 மணியளவில் சிறுவன் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தான்.

அப்போது, அங்கு வந்த 6 முதல் 7 தெருநாய்கள் சிறுவனைச் சூழ்ந்துகொண்டு திடீரெனத் தாக்கத் தொடங்கின. மேலும், அச்சிறுவனை அருகில் இருந்த ஒரு வயல்வெளிக்கு சுமார் 50 மீட்டர் தூரத்திற்கு இழுத்துச் சென்று கொடூரமான முறையில் கடித்துக் குதறின. நாய்களின் தாக்குதலால் சிறுவனின் உடல் முழுவதும் ஆழமான காயங்கள் ஏற்பட்டன. குறிப்பாக, தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, மண்டையோட்டின் ஒரு பகுதியும் தலைமுடியும் பெயர்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

அப்போது அந்த வழியாக வந்த முதியவர் ஒருவர், இதைப் பார்த்து சத்தம் போட்டுக் கூச்சலிட்டார். அவரது சத்தத்தைக் கேட்டு ஓடிவந்த சிறுவனின் குடும்பத்தினரும் கிராம மக்களும் நாய்களை விரட்டிவிட்டு, ரத்த வெள்ளத்தில் கிடந்த சிறுவனை மீட்டு உடனடியாக  அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

சிறுவனின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருந்ததால், மேல் சிகிச்சைக்காக அவர் உடனடியாக இந்தூர் நகரில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிறுவனுக்கு அவசரப் பிரிவில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டுள்ளது. தற்போது சிறுவன் தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளதாக அவனது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

சுர்கான் ஜோஷி கிராமத்தில் தெருநாய்களின் தொல்லை நீண்ட நாட்களாக நீடித்து வருவதாகக் கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த நாய்கள் அடிக்கடி குழந்தைகள், கால்நடைகள் மற்றும் பிற விலங்குகளைத் தாக்கி வருவதாகவும், இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவொரு உறுதியான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அவர்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர். மேலும் இந்தத் தெருநாய் பிரச்சினைக்கு மாவட்ட நிர்வாகம் உடனடியாக நிரந்தரத் தீர்வு காணாவிட்டால், மிகப்பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் கிராம மக்கள் எச்சரித்துள்ளனர்.