நடந்து முடிந்த கேரள சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான யு.டி.எஃப் கூட்டணி மூன்றில் இரண்டு பங்குக்கும் அதிகமான இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. இதில் காங்கிரஸ் கட்சி மட்டுமே தனியாக 63 இடங்களை வென்று அசத்தியது.
முதலமைச்சர் நாற்காலியை யார் அலங்கரிப்பது என்பதில் காங்கிரஸ் கட்சிக்குள் சில நாட்கள் கடுமையான இழுபறி நீடித்து வந்த நிலையில், இறுதியாக வி.டி. சதீசனை முதலமைச்சராகக் காங்கிரஸ் தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனைத் தொடர்ந்து, அவர் நேற்று முன்தினம் மறைந்த முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டியின் இல்லத்திற்குச் சென்று அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்துப் பேசினார்.
பதவியேற்பு விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வரும் வேளையில், புதிய முதலமைச்சர் வி.டி. சதீசன், கேரள முன்னாள் அமைச்சர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றது அரசியல் வட்டாரத்தில் பெரும் நெகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் இரு கட்சியினரும் மேடைகளில் ஒருவரையொருவர் கடுமையாக விமர்சித்து வந்த நிலையில், இந்தச் சந்திப்பு தமிழக முதலமைச்சர் விஜய் கடைபிடிக்கும் அரசியல் நாகரீக பாணியை நினைவுபடுத்துவதாக அமைந்துள்ளது.
வருகிற மே 18 அன்று நடைபெறும் பிரம்மாண்ட பதவியேற்பு விழாவில்,மற்ற மாநில காங்கிரஸ் முதலமைச்சர்களுடன் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யும் பங்கேற்க உள்ளதாகத் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
