மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் உல்ஹாஸ்நகரில், ஒரே சமூகத்தைச் சேர்ந்த இரு குடும்பங்களுக்கு இடையே ஏற்பட்ட கோவில் நுழைவுரிமை தகராறில், பெண் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டு, அரை நிர்வாணமாக்கப்பட்டு, செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட அதிர்ச்சி அளிக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது.

இந்த கொடூர சம்பவத்தின் போது பாதிக்கப்பட்ட பெண்ணின் தலைமுடி வெட்டப்பட்டு, அவர் கொடூரமாகத் தாக்கப்படும் வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. இவ்விவகாரம் தொடர்பாக உல்ஹாஸ்நகர் வித்தல் வாடி காவல் துறையினர் உடனடியாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

“>

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள உல்ஹாஸ்நகர் உதவி காவல் ஆணையர் ஷைலேஷ் காலே, இரு குடும்பங்களுக்கு இடையேயான மோதல் காரணமாக இந்த வன்முறை நடந்துள்ளதாகவும், இதில் தொடர்புடைய ஏழு நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, இதுவரை இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.