மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கின் ஹிராவாடி பகுதியில் உள்ள நகைக் கடை ஒன்றில் ஆயுதமேந்திய கொள்ளையர்கள் புகுந்து துணிகரக் கொள்ளையில் ஈடுபட முயன்ற அதிர்ச்சி வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மேலும் மூன்று மோட்டார் சைக்கிள்களில் வந்த ஆறு பேர் கொண்ட ஆயுதமேந்திய கும்பல், கடையை மூடும் நேரத்தில் உள்ளே புகுந்து துப்பாக்கியால் சுட்டும், ஊழியர்களைத் தாக்கியும் நகைகளைக் கொள்ளையடிக்க முயன்றது. இந்த இக்கட்டான சூழ்நிலையிலும், அந்த நகைக் கடையின் பெண் உரிமையாளர் சிறிதும் அச்சமின்றி, மிகுந்த துணிச்சலுடன் கொள்ளையர்களை எதிர்கொண்டு அவர்களைத் தடுத்து நிறுத்தப் போராடினார்.

“>

இந்தத் துணிகரச் சம்பவத்தின் போது ஏற்பட்ட மோதலில் கடையின் ஊழியர் ஒருவர் காயமடைந்த நிலையில், அவர் சிகிச்சைக்காக உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடையின் பெண் உரிமையாளர் காட்டிய அசாதாரண துணிச்சலால் கொள்ளையர்களின் திட்டம் முறியடிக்கப்பட்டதுடன், சம்பவ இடத்திலேயே இரண்டு கொள்ளையர்கள் பிடிபட்டனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள பஞ்சவடி காவல்துறையினர், தப்பியோடிய மற்ற நான்கு கொள்ளையர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். ஆபத்தான நிலையிலும் கொள்ளையர்களைத் தைரியமாக எதிர்கொண்ட அந்தப் பெண் உரிமையாளரின் வீரத்திற்குப் பொதுமக்கள் மத்தியில் பெரும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.