உத்தரப்பிரதேசத்தில் பி.டெக் படித்து வந்த மாணவர் ஒருவர், கல்விச் சுமை மற்றும் மன அழுத்தம் காரணமாகத் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சியூட்டும் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஒரு தனியார் விடுதி அறையில் தூக்கிட்ட நிலையில் மீட்கப்பட்ட அம்மாணவர், தற்கொலைக்கு முன்னதாகத் தன் பெற்றோருக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், கல்வி எதிர்பார்ப்புகளைத் தம்மால் பூர்த்தி செய்ய முடியாதது குறித்தும், தனது படிப்பிற்காகப் பெற்றோர் செலவழித்த பணம் வீணாகிவிட்டதே என்ற குற்ற உணர்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ளார். மேலும், “நான் அடுத்த பிறவியில் மீண்டும் உங்கள் மகனாகவே பிறந்து வருவேன்” என்று அவர் எழுதியுள்ள வரிகள் பார்ப்போரின் நெஞ்சைக் உலுக்குவதாக அமைந்துள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஆரம்பக்கட்ட விசாரணையில், படிப்பில் ஏற்பட்ட அதீத மன அழுத்தமே மாணவனின் இந்த விபரீத முடிவுக்குக் காரணம் என்று தெரியவந்துள்ளது.
இந்நிலையில் தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல என்பதை உணர்ந்து, மாணவர்கள் தங்களுக்கு ஏற்படும் கல்விச் சுமைகளையும், மன அழுத்தங்களையும் பெற்றோரிடமோ அல்லது ஆலோசகர்களிடமோ வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். இத்தகைய துயரமான நிகழ்வுகள் எதிர்காலத்தில் நிகழாமல் இருக்க அவசியமாகிறது.
