இன்றைய டிஜிட்டல் உலகில் பலரும் காலைக் கடன்களை முடிக்கும்போது மொபைல் போனைப் பயன்படுத்தும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர். ஆனால், தினமும் டாய்லெட் சீட்டில் 15 நிமிடங்களுக்கு மேல் இவ்வாறு நீண்ட நேரம் அமர்ந்திருப்பது மூல நோய் ஏற்படும் அபாயத்தை பல மடங்கு அதிகரிக்கும் என்று மணிப்பால் மருத்துவமனையின் குடல் மற்றும் ரோபோடிக் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் மஞ்சுநாத் ஹரிதாஸ் எச்சரிக்கிறார்.

இது குறிப்பாக, நவீன மேற்கத்திய பாணி கோப்பைகளில் அமரும் போது, நம்முடைய மலக்குடல் மற்றும் ஆசனவாய் பகுதியில் உள்ள நரம்புகளுக்கு அதிகப்படியான அழுத்தம் ஏற்படுகிறது. இதனால், காலப்போக்கில் அந்த நரம்புகள் வீங்கி, மலம் கழிக்கும் போது கடுமையான வலி, அரிப்பு மற்றும் ரத்தப்போக்குடன் கூடிய மூல நோயாக உருவெடுக்கிறது.

மேலும், மலச்சிக்கல் உள்ளவர்கள் தங்களின் குடலை முழுமையாக சுத்தம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் நீண்ட நேரம் டாய்லெட்டில் அமர்ந்திருப்பது, இந்த பாதிப்பை இன்னும் மோசமாக்கும் என்று மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். இந்த அதிகப்படியான முக்கல் மற்றும் அழுத்தத்தால் ஆசனவாயில் கிழிவு மற்றும் மலக்குடல் இறக்கம் போன்ற தீவிர பிரச்சனைகள் ஏற்படலாம்.

இதனால் இதிலிருந்து தப்பிக்க, டாய்லெட்டிற்குள் போன் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மேலும், குடல் இயக்கம் சீராக இருக்க நார்சத்து மிகுந்த உணவுகளை உட்கொள்வது, போதிய அளவு தண்ணீர் குடிப்பது மற்றும் வழக்கமான உடற்பயிற்சிகளை மேற்கொள்வது அவசியமாகும். டாய்லெட்டில் 10 நிமிடங்களுக்கு மேல் செலவிட்டாலோ, வலியோ அல்லது ரத்தப்போக்கோ இருந்தாலோ உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.