நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் அரசியல் தாக்கம் குறித்து காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். அதில், தாங்கள் ஆரம்பத்தில் விஜய்யின் அரசியல் பலத்தைக் குறைத்து மதிப்பிட்டுவிட்டதாக அவர் ஓப்பந்துக் கொண்டுள்ளார்.
விஜய் தேர்தலில் குறிப்பிட்ட சதவீத வாக்குகளை மட்டுமே பெறுவார் என்று நினைத்த வேளையில், தற்போதோ அந்த வாக்குகள் பெரும் தொகுதிகளாகவும், வெற்றியாகவும் மாறி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
தவெக மற்றும் திமுகவுக்கு இடையேதான் போட்டி என்ற விஜய்யின் கருத்தை ஆரம்பத்தில் யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும், தேர்தல் முடிவுகள் தற்போதைய கள யதார்த்தத்தை உணர்த்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் திமுக, அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளும் வேண்டாம் என்று நினைக்கும் ஒரு பெரிய வாக்கு வங்கி எப்போதும் இருந்து வருவதாகவும், ஆனால் அதை இதுவரை யாரும் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றும் கார்த்தி சிதம்பரம் விளக்கியுள்ளார்.
விஜய் ஒரு முன்னணி மக்கள் நட்சத்திரமாக இருப்பதால், திராவிடக் கட்சிகள் மீது ஈடுபாடு இல்லாதவர்கள், சோசியல் மீடியா மூலம் அரசியலைக் கவனிக்கும் புதிய தலைமுறை இளைஞர்கள் ஆகியோர் விஜய்க்குப் பெருமளவில் வாக்களித்துள்ளனர் என்றும், இதுவே அவரது இந்த அரசியல் தாக்கத்திற்குக் காரணம் என்றும் அவர் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.
