மத்தியப் பிரதேசத்தின் குவாலியரில், ஆசை வார்த்தைகள் கூறி கடத்தப்பட்ட சிறுமி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட கொடூரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் சிறுமி காணாமல் போனதைத் தொடர்ந்து, அவரது தாய் அளித்த புகாரின் பேரில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட குவாலியர் போலீசார், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து சிறுமியை மீட்டதோடு, கடத்தலுக்குக் காரணமான யோகேஷ் என்ற நபரையும் கைது செய்தனர்.

மீட்கப்பட்ட சிறுமிக்குக் குவாலியரில் உள்ள ஒரு காப்பகத்தில் கவுன்சிலிங் வழங்கப்பட்டு, ஒரு மாதத்திற்குப் பிறகு அவர் தனது வீட்டிற்கு அனுப்பப்பட்டார்.

ஆரம்பத்தில் பயம் மற்றும் கடுமையான மன உளைச்சல் காரணமாகப் போலீசாரிடம் உண்மையைச் சொல்லாத சிறுமி, வீட்டிற்குச் சென்ற பிறகு தனக்கு நேர்ந்த கொடூரத்தை தனது தாயிடம் கண்ணீருடன் விவரித்துள்ளார்.

சிறுமி கடத்தப்பட்டுப் பிணைக் கைதியாக வைக்கப்பட்டு, கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட அதிர்ச்சித் தகவலை அறிந்த அவரது தாய், மீண்டும் காவல் நிலையத்தில் புதிய புகார் ஒன்றை அளித்தார்.

இந்தச் கொடூர சம்பவத்தில் இரண்டு பெண்களுக்குத் தொடர்பு இருப்பதாகப் புகாரில் குறிப்பிடப்பட்டதை அடுத்து, போலீசார் 4 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் என மொத்தம் ஆறு பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

கடத்தலுக்கு உதவியது, வன்கொடுமை செய்தது எனப் பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதியப்பட்டு, குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஐந்து பேரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.

இந்த வழக்கில் தலைமறைவாக இருக்கும் மற்றொரு நபரைத் தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.