மும்பையில் மனைவியின் கள்ளக்காதலை அறிந்த கணவன், மனைவியின் கண்முன்னே அவரது காதலனை மது அருந்த வைத்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பை கோரேகான் ஆரே காலனி பகுதியில் வசிக்கும் பீம்ராஜ் ஓம்பிரகாஷ் சர்மா என்பவருக்கு, தனது மனைவி விக்காஸ் அசோக் புசாரே என்ற நபருடன் நெருக்கமாக இருப்பது குறித்து நீண்ட நாட்களாக சந்தேகம் இருந்து வந்தது.
இதனால் ஆத்திரமடைந்த பீம்ராஜ், விக்காஸை பழிவாங்க ஒரு பயங்கரமான திட்டத்தைத் தீட்டினார். இதன்படி, அவர் விக்காஸை தனது வீட்டிற்கு ஒரு மது விருந்துக்காக அழைத்துள்ளார். அன்று இரவு பீம்ராஜ், அவரது மனைவி மற்றும் விக்காஸ் ஆகிய மூவரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தியுள்ளனர். மது போதையில் இருந்தபோது, பீம்ராஜ் தனது மனைவியுடனான விக்காஸின் தொடர்பு குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
மேலும் ஆத்திரம் உச்சத்துக்கே செல்ல, திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியால் விக்காஸின் கழுத்தை அறுத்துக் கொலை செய்தார். இந்த கோர சம்பவம் மனைவியின் கண்முன்னே நடந்துள்ளது. கொலைக்குப் பிறகு பீம்ராஜ் ஆரே காட்டுப்பகுதிக்குள் தப்பி ஓடினார். இருப்பினும், தகவலறிந்து விரைந்த ஆரே காலனி போலீசார் மூன்று தனிப்படைகள் அமைத்துத் தேடி, மூன்றே மணி நேரத்திற்குள் குற்றவாளியைக் கைது செய்தனர்.
