ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதலால், உலகின் மிக முக்கியமான கடல் வணிகப் பாதையான ஹோர்முஸ் ஜலசந்தி கடந்த இரண்டு மாதங்களாக முடங்கியுள்ளது. உலகின் 25 சதவீத எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் இதன் வழியாகவே நடக்கும் என்பதால், வளைகுடா நாடுகளின் வர்த்தகம் பெரும் பாதிப்புக்குள்ளானது.

இதற்குத் தீர்வாக சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமான் ஆகிய நாடுகள் இணைந்து பாலைவனத்தின் வழியாக ஒரு புதிய சாலை வழித்தடத்தை உருவாக்கியுள்ளன. தற்போது தினமும் சுமார் 3,500 சரக்கு லாரிகள் இந்தப் பாதையில் அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் செல்கின்றன.

இந்த புதிய வழித்தடத்தின்படி, ஐக்கிய அரபு அமீரகத்தின் துறைமுகங்களில் இருந்து சரக்குகளை ஏற்றும் லாரிகள், ஓமான் வழியாக சவூதி அரேபியாவின் செங்கடல் துறைமுகங்களை அடைகின்றன. அங்கிருந்து கப்பல்கள் மூலம் உலக நாடுகளுக்குப் பொருட்கள் அனுப்பப்படுகின்றன.

கடல் வழியை விட இந்தச் சாலைப் போக்குவரத்து செலவு அதிகம் என்றாலும், ஈரானின் அச்சுறுத்தல் இல்லாத பாதுகாப்பான பாதையாக இது கருதப்படுகிறது. ஹோர்முஸ் ஜலசந்தியை ஈரான் தனது ராணுவக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள நிலையில், வளைகுடா நாடுகள் கண்டறிந்துள்ள இந்த மாற்றுப் பாதை உலகளாவிய விநியோகச் சங்கிலிக்கு ஒரு முக்கிய வரப்பிரசாதமாகப் பார்க்கப்படுகிறது.