மயிலாடுதுறை மாவட்டம் அருகே, வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜோதிமாறன் – சரண்யா தம்பதி, கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துள்ளனர்.

இந்நிலையில், கணவர் ஜோதிமாறன் தொடர்ந்து வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதால் மனமுடைந்த சரண்யா, உறவினர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மகளின் மரணத்திற்கு நீதி கேட்டு அவரது உறவினர்கள் மருத்துவமனை முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது அப்பகுதியில் பதற்றத்தை உருவாக்கியது.

இந்த விவகாரம் தொடர்பாக சரண்யாவின் தந்தை அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவர் ஜோதிமாறனை அதிரடியாக கைது செய்துள்ளனர். திருமணமாகி ஒன்றரை ஆண்டுகளே ஆவதால், வரதட்சணை கொடுமை மற்றும் தற்கொலைக்கான பின்னணி குறித்து சீர்காழி உதவி கலெக்டர் சுரேஷ் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

காதலித்து கரம் பிடித்த மனைவியே வரதட்சணைக்காக சித்திரவதை செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவம் அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.