தாய் அன்பிற்கு ஈடு இணை ஏதுமில்லை என்பதை உணர்த்தும் நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று லக்னோ விமான நிலையத்தில் நடந்துள்ளது. சவுதி அரேபியா செல்வதற்காக வாலிபர் ஒருவர் விமான நிலையம் வந்திருந்தார்.

அனைத்து பாதுகாப்பு சோதனைகளையும் முடித்துவிட்டு அவர் செல்லவிருந்த நிலையில், வெளியே நின்றிருந்த அவரது தாய் பிரிவைத் தாங்க முடியாமல் கதறி அழுவதைக் கண்டார்.

பாதுகாப்பு விதிகள் மிகவும் கடுமையாக இருந்தபோதிலும், தனது தாயை கடைசி முறையாகக் கட்டிப்பிடித்து ஆறுதல் கூற விரும்புவதாக அங்கிருந்த சி.ஐ.எஸ்.எஃப் அதிகாரியிடம் அந்த வாலிபர் உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.

பொதுவாக பாதுகாப்பு அதிகாரிகள் விதிகளில் சமரசம் செய்ய மாட்டார்கள் என்ற பிம்பத்தை உடைக்கும் வகையில், அந்த அதிகாரி மனிதாபிமானத்துடன் வாலிபரைத் தனது தாயைச் சந்திக்க அனுமதித்தார்.

உடனே ஓடிச் சென்ற வாலிபர், தனது தாயைக் கட்டிப்பிடித்து அவர் கண்ணீரைத் துடைத்து ஆறுதல் கூறினார். அன்னையர் தினத்தை முன்னிட்டு இணையத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ, காண்போரின் கண்களைக் குளமாக்கியுள்ளது.

“>

 

பாதுகாப்பு விதிகளையும் மனிதாபிமானத்தையும் மிகச் சரியாகக் கையாண்ட அந்த அதிகாரியின் செயலுக்குப் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.