வெறும் நடைப்பயிற்சி செய்யச் சென்ற ஒருவருக்கு, மண்ணுக்குள் ஒளிந்திருந்த பழங்கால தங்கப் புதையல் சிக்கிய சம்பவம் ஒட்டுமொத்த உலகையுமே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. நார்வே நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர் காலையில் காட்டில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தபோது, மரத்தடியில் ஏதோ ஒன்று மின்னுவதைக் கண்டுள்ளார்.

ஆர்வத்துடன் மண்ணைத் தோண்டிப் பார்த்தபோது, சுமார் 1500 ஆண்டுகள் பழமையான, தங்கத்தால் இழைக்கப்பட்ட வாள் உறையின் ஒரு பகுதி அவருக்குக் கிடைத்துள்ளது.

ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த அரிய கண்டுபிடிப்பு, அந்த காலத்தின் மிகவும் சக்திவாய்ந்த போர்வீரன் ஒருவனுக்குச் சொந்தமானதாக இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

சுமார் 33 கிராம் எடையும், 6 சென்டிமீட்டர் நீளமும் கொண்ட இந்த தங்கப் பொருளில் பாம்பு போன்ற வேலைப்பாடுகள் மிகவும் நுணுக்கமாகச் செதுக்கப்பட்டுள்ளன.

இது வெறும் அலங்காரப் பொருள் மட்டுமல்ல, ஒரு செல்வாக்குமிக்க போர்வீரன் பயன்படுத்திய வாளின் ஒரு பகுதி என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

அந்த காலத்திலிருந்த போர்வீரர்கள் கடவுளுக்குக் காணிக்கையாக இத்தகைய விலைமதிப்பற்ற பொருட்களைப் புதைத்து வைத்திருந்திருக்கலாம் என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

வடக்கு ஐரோப்பா முழுவதிலும் இது போன்ற 17 அரிய பொருட்கள் மட்டுமே இதுவரை கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், நடைப்பயிற்சி சென்றவருக்கு இப்படி ஒரு பொக்கிஷம் கிடைத்திருப்பது அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.