தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தை ஆட்சி அமைக்க அழைக்காமல், ஆளுநர் காலதாமதம் செய்வது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு ஆளுநர்கள் மூலமாக ஒன்றிய பாஜக அரசு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருவதாகவும், ஆளுநரின் இந்தச் செயல் உள்நோக்கம் கொண்டது என்றும் அவர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் விமர்சித்துள்ளார்.
ஒரு கட்சி தனது பெரும்பான்மையை ஆளுநர் மாளிகையில் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை, அதைச் சட்டமன்றத்தில்தான் நிரூபிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள செல்வப்பெருந்தகை, தவெக தலைவர் விஜய் அவர்களை உடனடியாக ஆட்சி அமைக்க அழைக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
மாநில அரசுகளின் தலையெழுத்து ஆளுநர் மாளிகையின் புல்வெளிகளில் தீர்மானிக்கப்படுவதில்லை, அவை சட்டப்பேரவை தளத்தில்தான் உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சி சார்பில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
