அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே 40 நாட்கள் நீடித்த போர் தற்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. போர் நின்றாலும், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மோதல் இன்னும் தணியவில்லை.
உலகிற்கே மிக முக்கியமான எரிபொருள் போக்குவரத்து பாதையான ‘ஹார்முஸ் ஜலசந்தியை’ ஈரான் மூடியுள்ளதால், உலக நாடுகள் பெரும் எரிசக்தி தட்டுப்பாட்டைச் சந்தித்து வருகின்றன.
ஒருபுறம் ஈரானை நிபந்தனையின்றி சரணடையச் சொல்லி அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மிரட்டி வந்தாலும், மறுபுறம் அமெரிக்கா இப்போது ஈரானிடம் ஒரு புதிய அமைதி ஒப்பந்தத்தை முன்மொழிந்துள்ளது.
அமெரிக்காவின் இந்த புதிய திட்டத்தில், போரை முழுமையாக நிறுத்துவதற்கும், ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதற்கும் ஈரான் சம்மதிக்க வேண்டும் என்ற இரண்டு முக்கிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதற்குப் பதில் அளிக்க ஈரானுக்கு 48 மணிநேரம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
ட்ரம்ப் ஒருபுறம் ஈரானை வீழ்த்திவிட்டதாகக் கூறினாலும், மறுபுறம் அவரே பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுப்பது ஏன் என்று உலக நாடுகள் ஆச்சரியத்துடன் விவாதித்து வருகின்றன. ஈரான் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டால் மட்டுமே உலக நாடுகளுக்கு மீண்டும் எரிபொருள் விநியோகம் தடையின்றி கிடைக்க வாய்ப்புள்ளது.
