தமிழகத்தில் நிலவும் புதிய அரசியல் மாற்றங்களின் ஒரு பகுதியாக, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு அளிப்பது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரும் மே 8-ஆம் தேதி அவசரச் செயற்குழு கூட்டத்தைக் கூட்டுகிறது.

தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள திடீர் திருப்பங்களைத் தொடர்ந்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்கும் இந்த ஆலோசனைக் கூட்டம் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் தரப்பில் இருந்து, தங்களுக்கு ஆதரவு கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு அதிகாரப்பூர்வமாகக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.  இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீ. வீரபாண்டியன் கூறுகையில், “தவெக தரப்பில் இருந்து ஆதரவு கோரி கடிதம் வந்துள்ளது உண்மை. இது குறித்து நாளை மறுநாள் (மே 8) நடைபெறும் அவசரச் செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் தொடர்பான பேச்சுக்கள் வலுப்பெற்று வரும் சூழலில், கம்யூனிஸ்ட் கட்சியின் இந்த அவசர முடிவு அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.